சபை நம்பிக்கையும் அறிக்கையும்
தேவனின் மந்தை சபையானது, பரிசுத்த வேதாகமம் தேவ ஆவியால் ஏவப்பட்டு தேவ மனிதர்களால் எழுதப்பட்ட பரிபூரண சத்தியமுள்ளது;இரட்சிக்கப் படுவதற்கு மனிதனை கிறிஸ்துவை நோக்கி நடத்துகிறது ;உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது; எல்லாவற்றின்மேலும் உறுதியும் இறுதியுமான அதிகாரம் பெற்றதுஎன்று விசுவாசிக்கும் சபையாகும்.
தேவனின் மந்தை ஊழியங்கள் இயேசுவே கிறிஸ்து என்றும், கிறிஸ்தேசுவே கர்த்தரென்றும், கர்த்தரே தேவனென்றும், தேவன் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் வேதவாக்கியங்களின் படிவிசுவாசிக்கிற,போதிக்கிற, அறிவிக்கிற சபையாகும்.
தேவன் :
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு; தேவன் ஆவியாயிருக்கிறார்; சிருஷ்டிகர், அதரிசனமானவர். ஆனால்இந்த தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்கிற சத்தியம் மகா மேன்மையான தேவ பக்திக்குரியது.
கர்த்தர் :
இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; இவர்அதரிசனமான தேவனுடையதற் சுரூபம்; இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமானவர்; தேவன்நம்மை மீட்டு இரட்சிப்பதற்காக தன்னை பாவநிவாரண பலியாக ஒப்புக் கொடுக்கும்படி பரிசுத்த ஆவியால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்து பிறந்து மனிதனாக மாம்சத்திலே காணப்பட்டபடியால் தேவனுடைய குமாரன் எனப்பட்டார்.
மனுக்குலத்தின் பாவம் அக்கிரமம் மீறுதலுக்காக சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம்சிந்தி, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, உயிரோடிருக்கிறவராய் தன்னை காண்பித்து தம்முடைய அப்போஸ்தலர்களால் உலகத்தில் பிரசங்கிக்கப்பட்டார். வேதம் இந்த இயேசுவை கிறிஸ்து என்றும்; இயேசு கிறிஸ்துவை கர்த்தர் என்றும்;கர்த்தர் ஒருவரே தேவன் என்றும்;தேவன் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் வலியுறுத்துகிறது.
பரிசுத்தஆவி :
பரிசுத்த ஆவி என்கிற வார்த்தை தேவன் ஆவியாயிருக்கிறபடியால் அவரை குறிக்கிற வார்த்தை; தேவன் தம்மை விசுவாசிக்கிறவர்கள் மீட்கப்படும்படி அவர்களை தமது ஆவியால் முத்திரையிட்டு, நமக்குள் வாசமாயிருக்கிறார். கர்த்தரே ஆவியானவர் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.
இரட்சிப்பு :
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம் சகலபாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறதற்காய் சிந்தப்பட்டது. அவருடைய நாமத்தின் மேல் வைக்கிற விசுவாசமே நம்மை நீதிமான்களாக்கி இரட்சிக்கிறது; இது தேவனுடைய சுத்த கிருபையும் அவரால் உண்டாகிற ஈவுமாய் இருக்கிறது; ஆவியினால் மறுபடியும் பிறந்த அவருடைய பிள்ளைகளாய் மாற்றுகிறது.
எதிர்கால நிகழ்வுகள் :
கர்த்தருடைய வருகைக்காக மனவாட்டியாகிய சபை ஆயத்தப்படுகிறது, காத்திருக்கிறது; அனைவருக்கும் சரீர உயிர்த்தெழுதல் உண்டு;கர்த்தருக்குள் மரித்தவர்கள் நித்திய ஜீவனை அடையும்படி முதலாம் உயிர்த்தெழுதலிலேயும், மற்றவர்கள் நித்திய அழிவாகிய நியாயத் தீர்ப்பை அடையும்படி இரண்டாம் உயிர்த்தெழுதலிலேயும் எழும்புவார்கள்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அவருக்கு காத்திருக்கிறவர்கள் இரட்சிப்படையவும், அவிசுவாசிகள் நியாயத் தீர்ப்படைவதற்கு ஏதுவாயும் இருக்கிறது.
தேவசபை :
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம்; கிறிஸ்துவே சபைக்கு தலையாயிருக்கிறார். இரட்சிப்படையும் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் விசுவாசம் வைத்தவர்கள், ஆவியினால் மறுபடியும் பிறந்து அவருடைய சரீரமாகிய சபைக்குள் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறார்கள்.
ஞானஸ்நானம் :
இயேசு கிறிஸ்துவை கர்த்தராகவும் தங்கள் ஆத்துமாவின் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டவர்கள் நல் மனசாட்சியின் அடையாளமாக தண்ணீரில் மூழ்கி பாவத்திற்கு மரித்தவர்களாயும் நீதிக்கென்று பிழைத்திருக்கிறவர்களாயும் இருக்கும்படி பிதாகுமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானங் கொடுங்கள் என்ற கட்டளையின் படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் அவருடைய நாமத்தினாலே (கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்) கொடுக்கப்படுவதாகும்.
திருவிருந்து :
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசிவாசிக்கிற அவருடைய சரீரமான சபையானது,கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறதற்காகவும், அவருடைய மரணத்தைத் நினைவு கூருவதற்காகவும்,கர்த்தருடைய கட்டளையின் படி ஆசரிக்கப்படுவதாகும்.