தேவனின் மந்தை சபையானது, பரிசுத்த வேதாகமம் தேவ ஆவியால் ஏவப்பட்டு தேவ மனிதர்களால் எழுதப்பட்ட பரிபூரண சத்தியமுள்ளது;இரட்சிக்கப் படுவதற்கு மனிதனை கிறிஸ்துவை நோக்கி நடத்துகிறது; உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது; எல்லாவற்றின்மேலும் உறுதியும் இறுதியுமான அதிகாரம் பெற்றதுஎன்று விசுவாசிக்கும் சபையாகும்.
தேவனின் மந்தை ஊழியங்கள் இயேசுவே கிறிஸ்து என்றும், கிறிஸ்தேசுவே கர்த்தரென்றும், கர்த்தரே தேவனென்றும், தேவன் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் வேதவாக்கியங்களின்படி விசுவாசிக்கிற, போதிக்கிற, அறிவிக்கிற சபையாகும்.
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு; தேவன் ஆவியாயிருக்கிறார்; சிருஷ்டிகர், அதரிசனமானவர். ஆனால் இந்த தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்கிற சத்தியம் மகா மேன்மையான தேவபக்திக்குரிய இரகசியம் என்று வேதம் அறிவிக்கிறது.
இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; இவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்; இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமானவர்; தேவன் நம்மை மீட்டு இரட்சிப்பதற்காக தன்னை பாவநிவாரண பலியாக ஒப்புக் கொடுக்கும்படி பரிசுத்த ஆவியால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்து பிறந்து மனிதனாக மாம்சத்திலே காணப்பட்டபடியால் தேவனுடைய குமாரன் எனப்பட்டார்.
மனுக்குலத்தின் பாவம் அக்கிரமம் மீறுதலுக்காக சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்தி, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, உயிரோடிருக்கிறவராய் தன்னை காண்பித்து தம்முடைய அப்போஸ்தலர்களால் உலகத்தில் பிரசங்கிக்கப்பட்டார்.
வேதம் இந்த இயேசுவை கிறிஸ்து என்றும்; இயேசு கிறிஸ்துவை கர்த்தர் என்றும்; கர்த்தர் ஒருவரே தேவன் என்றும்; தேவன் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் வலியுறுத்துகிறது.